Friday 18 April 2014

வெறுப்பும் பேச்சும்

அக்பருதீன் ஒவைசி என்று ஒரு ஆந்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர். இவர் கடந்த மாதம் நிர்மல் என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது திரைப்பட வில்லன் வசனம் பேசுவது போலப் பே()சியிருக்கிறார்,  அவர் பேச்சு 64 நிமிடங்கள் நீடித்தது. முழுதும் இந்துக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகள், பாரத தேசத்தின் தொன்மை மிக்க வரலாறு இவற்றை சிறுமைப்படுத்தும் விதமாக அமைந்தது அந்தப் பேச்சு.

சான்றுக்குச் சில இங்கே:

ஏ இந்துஸ்தானமே! நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம், நீ 100 கோடி பேரைக் கொண்டிருக்கிறாய். 15 நிமிடங்கள் காவல்துறையை அகற்று. யார் வலுவானவர்கள் பார்த்துவிடலாம்.

இந்துஸ்தானமே! இன்று என் முன்னால் ஒலிபெருக்கி இருக்கிறது. நாளை வேறெதாவது இருக்கும். அப்போது இந்த நாட்டில் ஓடும் ரத்த ஆறு போல ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பார்த்திருக்க முடியாது.  

 இப்படியாகப் பேசிய அந்தச் சூரர் மீது பாஜக சட்டப்பிரிவு புகார் கொடுத்தது. சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பேச்சு, தேசத்தின் இறையாண்மைக்குச் சவால் விட்டுப் பேசியது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக இவர் கைது செய்யப்பட வேண்டும் என்றனர்.  153A, 295A, 298, 504, 505, 506 IPC and 66A IT Act 2000 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குத் தொடர வேண்டினர் பாஜகவினர்.

வீரம் பேசிய சூரர் மருத்துவம் பார்க்கிறேன் என்று இங்கிலாந்துக்கு ஓடினார். முதலில் புகாரைக் கிடப்பில் போட்ட காவல்துறை ஊடகம் மற்றும் பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் அதிகமானதும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Police-failed-to-act-on-first-complaint-against-Akbaruddin-Owaisis-hate-speech/articleshow/17963235.cms?

சில நாட்கள் கழித்து ஐதராபாத் வந்தவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்தது காவல்துறை. ஆந்திர டிஜிபி இது ஒரு சாதாரண வழக்கு. விசாரணை அதிகாரி பார்த்துக் கொள்வார் என்றார். நடவடிக்கை பற்றி வற்புறுத்திக் கேட்டபோது ஒரு டிஜிபி விசாரிக்க வேண்டிய வழக்கு இது இல்லைஎன்று சொல்லிவிட்டுப் போனார்.

காங்கிரசு மதில் மேல் பூனை போல இஸ்லாமியர் ஓட்டு சட்டம் ஒழுங்கு என்று சிக்கிச் செய்வதறியாது கிடந்தது. ஊடகங்கள் ஒரு புறம் ஓவைசியைக் கண்டித்தால் மதசார்பின்மை பாதிக்குமோ என்று அஞ்சி இது ஒரு தனி மனிதனின் புலம்பல் என்று கூறின. இஸ்லாமியர் சிலர் ஓவைசியை ஆதரித்தனர். பலர் இது தேவையற்ற பேச்சு, ஆனால் பெரிது படுத்த வேண்டாம் என்றனர்.

ஐதராபாத்தில் எங்கோ மூலையில் ஓவைசி பேசியதை ஊடகங்கள் தொலைக்காட்சியில் காட்டி பெரிதாக்கிவிட்டன என்று குற்றம் சாட்டினார் ஒரு முஸ்லிம் பெரியவர். யூ டியூப் என்பது குறித்து அவர் அறிந்திருக்க நியாயமில்லை. யூ டியூப் இசுலாமுக்கு எதிரானது என்று ஃபத்வா கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

இந்த அக்பருதீன் ஒவைசியின் நோக்கம் என்ன? இப்படிப் பேச அவருக்குத் துணிவு எங்கிருந்து கிடைக்கிறது? அவரது பின்னணி என்ன? யார் யார் அவரை ஆட்டுவிக்கின்றனர்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிப் பார்க்கலாம்.

மஜ்லிஸ் ஏ இட்டேஹாதுல் முஸ்லிமீன் (MIM) என்பது ஓவைசி சார்ந்துள்ள கட்சி. இதற்கு முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு என்று பொருள் வரும். இந்தக் கட்சியின் தலைவர் இவரது அண்ணன் அசாதுதீன் ஒவைசி. இவர் லண்டனில் சட்டம் படித்த பாரிஸ்டர். பாராளுமன்ற உறுப்பினர். தம்பிக்குச் சற்றும் சளைக்காத அண்ணன். அசாமில் உள்ள இசுலாமியருக்கு அரசு உதவவில்லை என்றால் முஸ்லீம் இளைஞர்கள் செய்யும் புரட்சியைத் தடுக்க முடியாது என்று பாராளுமன்றத்தில் அரசை மிரட்டியவர். அரசுப்பணத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும்என்று எழுதி வைத்து உதவிகள் வழங்கியவர்.

இந்தக் கட்சியின் வரலாறு என்ன? கொள்கை என்ன என்று பார்த்தால் இவர்களின் இந்த இந்துஸ்தான எதிர்ப்பு வெறி ஆச்சரியம் தராது. இந்த மஜ்லிஸ் அமைப்பு 1927ல் அப்போதைய ஐதராபாத் நிஜாமின் உத்தரவின் பேரில் அவருக்கு ஆதரவாகத் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு ஐதராபாத் ஒரு முஸ்லிம் சமஸ்தானமாக தனித்து இருக்கவேண்டும் என்று பாடுபட்டது. இந்தியக் குடியரசுடன் இணைவதை எதிர்த்தது.


1938ல் நவாப் பகதூர் யார் ஜங் என்பவர் இதன் தலைவரானார். இவர் இஸ்லாமிய  அடிப்படைவாதி. ஐதராபாத் நிஜாமை அராபிய முகமதின் முடிசூடிய அடிமைஎன்று பொது மேடையில் அழைத்தவர். இவர் காலத்தில் மஜ்லிஸ் அரசியல் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட்டது. முகமதலி ஜின்னாவின் முஸ்லிம் லீகுடன் இணைந்து செயல்பட்டது.

இந்த நவாப் பகதூர் யார் ஜங் 1927ல் ஆரியசமாஜத்தை எதிர்த்து இஸ்லாமைப் பரப்புவதற்கு ஒரு அமைப்பை நிறுவினார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துக்களை சமுதாய சீர்திருத்தம் மூலம் ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் இந்து மதத்தில் தக்கவைப்பதை இவர் வெறுத்தார். இந்துக்களை குழுக்களாக மதமாற்றப் பரிந்துரைத்தார். (http://www.bahaduryarjung.org/)

இவர் 1944ல் ஹக்கிம் அலி கான் என்ற நீதிபதி வீட்டில் நடந்த விருந்தில் ஹூக்கா புகைத்ததும் உயிரிழந்தார். ஐதராபாத் நிஜாம் சமஸ்தானத்தைக் காக்கும் சேவகர் மட்டுமே, மன்னரில்லை. இசுலாமியர் அனைவரும் இறைவனைத் தவிர யாரையும் தலைவனாக ஏற்க வேண்டாம் என்று பேசியதால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இவருக்குப் பிறகு மஜ்லிஸ் தலைமைக்கு வந்தவர் சையது காசிம் ரிஸ்வி. இவர் ஒரு வழக்கறிஞர். இவர் ரசாக்கர் என்ற நிஜாமின் ராணுவப் படைக்குத் தலைவராக இருந்தார். ஐதராபாத் இந்தியக்குடியரசுடன் இணைவதை எதிர்த்தார். ரகசியமாக பாகிஸ்தானுடன் ஐதராபாத் இணைவதற்குப் பணியாற்றினார்.

இந்தியக் குடியரசில் ஐதராபாத் இணையவேண்டும் என்று விவசாயிகளும் இந்துக்களும் சுவாமி ராமானந்த தீர்த்தரின் தலைமையில் ஆந்திர இந்து மஹாசபா ஆதரவுடன் போராடினர், அவர்களை இந்த ரசாக்கர் படையினர் கொடூரமாகத் தாக்கி அடக்கிவைத்தனர். http://www.srtri.in/index.htm

1948ல் சர்தார் படேல் மேற்கொண்ட போலீஸ் நடவடிக்கைக்குப் பிறகு ரசாக்கர் படை கலைக்கப்பட்டது. மஜ்லிஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. காசிம் ரிஸ்வி சர்தார் படேலைச் சந்தித்துப் பேசுகையில் பேனா முனையில் சரணடைவதை விட கத்தி முனையில் வீரம் காட்டிச் சாவோம்என்று பேசினார். இவர் பின்னர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தம் விடுதலைக்காக மத்திய அரசிடம் பேரம் பேசினார். பாகிஸ்தான் சென்று விடுவதாக உறுதியளித்து விடுதலையானார். பாகிஸ்தான் சென்று விட்டார். http://www.time.com/time/printout/0,8816,799076,00.html

Autocracy to Integration, Lucien D Benichou, Orient Longman (2000)

மஜ்லிஸ் மீதான தடை 1957ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அப்துல் வஹீத் ஒவைசி என்பவர் இதன் தலைமை ஏற்றார். தேர்தலில் ஆதரவு போட்டி அரசியல் என்று  சிறிது சிறிதாக மஜ்லிஸ் வளர்ந்தது. 1960ல் அப்துல் வஹீதின் மகன் சையத் சலாஹுதீன் ஓவைசி ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் மல்லேபள்ளி பகுதியில் காங்கிரசை எதிர்த்து வென்றது. சையத் சலாஹுதீன் சலார் ஏ மில்லத் (மக்கள் தளபதி) என்று அழைக்கப்பட்டார்.

1962ல் சலாஹுதீன் சட்டமன்றத் தேர்தலில் வென்றார். பிறகு சார்மினார் தொகுதியில் 1967ல் வென்றார். அதன் பிறகு ஐதராபாத் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பல இடங்களில் சட்டமன்றத் தேர்தலில் வென்றார். 1983ல் தெலுகுதேசம் பெரும்பான்மையாக வென்ற போதும் ஐதராபாத் பகுதியில் மஜ்லிஸ் வென்றது. 1984ல் சலாஹுதீன் பாராளுமன்றத் தேர்தலில் வென்றார், 2004 வரை அவரும் அதன் பின் அவர் மகன் அசாதுதீன் ஒவைசியும் தான் ஐதராபாத் எம்பியாகத் தொடர்கின்றனர். 2008ல் சலாஹுதீன் இறந்தபின் அசாதுதீன் கட்சிக்குத் தலைமை ஏற்றார். http://www.hindu.com/2008/09/30/stories/2008093058670300.htm

2007ல் மஜ்லிஸ் கட்சியின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஐதராபாத் வந்த போது அவரைத் தாக்கினர். நஸ்ரின் தலையைக் கொய்வது இசுலாமியக் கடமை என்று கூறினர். தஸ்லிமா நஸ்ரின் மற்றும் சல்மான் ருஷ்டி இருவருக்கும் எதிரான உயிர்க்கொலை ஃபத்வாவை செய்லபடுத்துவோம் என்று கூறினர்.

http://www.hindu.com/2007/08/11/stories/2007081161781600.htm

இந்தக் கட்சியின் ஆதரவு ஆந்திர சட்டமன்றத்தில் காங்கிரசுக்குத் தேவை என்பதால் இவர்களின் பல தேச இறையாண்மைக்கு எதிரான போக்கு கண்டு கொள்ளப்படவில்லை. ஆந்திர பொது விநியோகத்துறை அமைச்சர்  அடிலாபாத் பகுதியில் ரேஷன் கடை முறைகேடுகள் குறித்த புகார் பற்றி விசாரிக்க வந்தார். மஜ்லிஸ் கட்சியினர் அமைச்சர் ஒவைசியின் அனுமதியின்றி வந்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றனர். அமைச்சர் மன்னிப்புக் கேட்டார்.

இத்தகைய பாகிஸ்தான் ஆதரவுக் கொள்கையும் மதசகிப்புத்தன்மை என்பது அறவே அற்ற வழியில் வந்தவருமான அக்பருதீன் ஒவைசி 15 நிமிடம் காவல்துறை கைகட்டி நின்றால் 25 கோடி முஸ்லிம்களா 100 கோடி இந்துக்களா பார்த்துவிடுவோம் என்று பேசுவது அச்சரியமில்லை. ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் மதசார்பற்றகட்சிகள் இவர்களது செயல்பாடுகள் குறித்து மௌனம் காப்பதும் புதிதல்ல.

ஆனால் நாடு நலம் பெற இந்தக் கும்பல் அடக்கப்படவேண்டும். அதற்கு தேசநலனை மனதில் கொண்ட ஒரு வலிமையான அரசு மத்தியில் வேண்டும். தேசமுத்துமாரியின் திருவுளம் மகிழ தேசப்பணியில் தேசியவாதிகள் தீவிரமாக இறங்கினால் இது சாத்தியமே.
வந்தே மாதரம்!
 

No comments:

Post a Comment